சிவகாசி அரசு மருத்துவமனையில் குழந்தை தொட்டில் திட்டம் துவக்கம்
சிவகாசி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சிவகாசி மாநகராட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் குழந்தை தொட்டில் திட்டம் துவக்கப்பட்டது. மாவட்டத்தில் விருப்பமில்லாமல் பெறும் பச்சிளம் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசுவதை தடுப்பதற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் குழந்தை தொட்டில் வைக்கப்பட்டது. விருப்பமில்லாமல் பெறுகின்ற குழந்தைகளை தொட்டியில் வைப்பதன் மூலம் அரசு பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும். மாவட்டத்தில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பின்னர் சிவகாசி அரசு மருத்துவமனையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொட்டில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் வைக்கப்பட்டது. தொட்டில் வைக்கும் நிகழ்ச்சியில் தலைமை டாக்டர் அய்யனார் தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஜானகி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனியம்மாள், மாநகராட்சி குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை அன்பால் இணைவோம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெகதீஷ், மாரிமுத்து செல்வகணேஷ் செய்தனர்.