காட்டு யானைகள் புகுந்ததில் வாழை, மாமரங்கள் சேதம்
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே காட்டு யானைகள் புகுந்ததில் வாழை, தென்னை மா மரங்கள் சேதமாகி உள்ளது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் கிராம மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தென்னை, மா, வாழை உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. புல் பத்தி காடு அருகே சொந்தமாகவும் குத்தகைக்கு எடுத்தும் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதம் விளைவிப்பது தொடர்கிறது. இந்நிலையில் இங்குள்ள விவசாயிகளின் விளை நிலத்திற்குள் சில நாட்களாக காட்டு யானைகள் புகுந்து ஐம்பதிற்கும் அதிகமான தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தி உள்ளது. மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் மரங்களை உடைத்து சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருவதால் விளை நிலங்களுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.