| ADDED : நவ 14, 2025 03:55 AM
சிவகாசி: ''அ.தி.மு.க., கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வர உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் 220 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம்,'' என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் முகவர்கள் பயிற்சி முகாம் நடந்தது. இதில் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது. நமது கட்சியினர் போராளிகளாக மாற வேண்டும். ஒவ்வொருவரும் சோர்வு இல்லாமல் களப்பணி ஆற்ற வேண்டும். வியர்வை சிந்தி பாடுபடுவோம் வருங்காலம் சிறப்பாக அமையும். எஸ்.ஐ.ஆர்., நினைத்து தி.மு.க., பயப்படுகிறது. போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் தி.மு.க., வினருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர்களால் கள்ள ஓட்டு போட முடியாது. நாம் தேர்தல் கமிஷனுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுவோம். எதிர்பாராத பெரிய கட்சிகள் நமது கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். நான் மிகப்பெரிய பதவியில் அமர்வேன். உங்களுக்கு என்றும் நான் பாதுகாப்பாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.