சாத்துாரில் விஷ வாயு தாக்கி பீஹார் வாலிபர் பலி; இருவர் மயக்கம்
சாத்துார்; விருதுநகர் மாவட்டம் சாத்துார் என்.சுப்பையாபுரம் அட்டை மில்லில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பீஹாரை சேர்ந்த சோன்லால் 19, விஷ வாயு தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இருவர் மயக்கமுற்றனர். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுஜாத். இவரது அழகிரி பேப்பர் போர்ட்ஸ் அட்டை மில் என்.சுப்பையாபுரத்தில் உள்ளது. நேற்று மாலை 6:30 மணிக்கு அட்டை கம்பெனியில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் பீஹாரை சேர்ந்த சோன் லால், அபிதாப் 30, என். சுப்பையாபுரம் கணேசன் 36, ஈடுபட்டனர். விஷ வாயு தாக்கியதில் சோன்லால் சம்பவயிடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் மயக்கமுற்றனர். அவர்கள் சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.