அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு டிச.1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு டிச. 1 முதல் செயல்படுத்தப்படுகிறது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை திறக்கப்பட்ட நாள் முதல் வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தகுந்தாற் போல் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், டெக்னீசியன்கள், நிர்வாக பணியாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான வருகை பதிவேடு கையேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.ஆனால் மருத்துவமனையில் டாக்டர்களுக்கு மட்டும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் பணியாளர்களுக்கும் வருகை பதிவேட்டை செயல்படுத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு நடந்து வந்தது. இப்பணிகளுக்காக பணியாளர்களின் பெயர், துறை, வரிசை எண் உள்பட தேவையான தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து முடிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர தயாராகியது.இந்நிலையில் மருத்துவமனையின் அனைத்து துறை பணியாளர்களுக்கும் டிச. 1 முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் அந்தந்த துறைகளில் தங்கள் வருகை பதிவேட்டை சிரமமின்றி கையாள முடியும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.