சர்வர் கிடைக்காமல் தடைபட்ட பெண்களுக்கான வாரிய சேர்ப்பு முகாம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பெண்களுக்கான வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாமில் சர்வர் சரிவர கிடைக்காததால் பலர் காத்திருந்து ஏமாற்றுத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.மாவட்டத்தில் நவ. 23, 24 ஆகிய நாட்கள் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர், பேரிளம், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னி ஆகியோருக்கான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.விருதுநகரில் நகராட்சி அலுவலகம், ராவ் பகதுார் பள்ளி, முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. வாரியத்தில் பதிவு செய்வதற்காக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்ததால் பெண்கள் பலர் தேவையான சான்றிதழ்களுடன் முகாமிற்கு வந்தனர்.ஆனால் முகாமில் சர்வர் சரிவர கிடைக்காததால் அலுவலர்கள் இன்று போய் நாளை வாருங்கள் என கூறி வந்தவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் ஆர்வமாக வந்த பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பணிபுரியும் இடத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்து வந்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.எனவே மாவட்ட நிர்வாகம் உறுப்பினர் சேர்க்கையில் ஏற்படும் சர்வர் பிரச்னையை சரிசெய்து இனி வாரிய உறுப்பினர் முகாம் தடையின்றி நடக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.