உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரம் விவசாய கழிவுகளுக்கு தீ வைப்பு: --மரங்கள் கருகி சேதம்

ரோட்டோரம் விவசாய கழிவுகளுக்கு தீ வைப்பு: --மரங்கள் கருகி சேதம்

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் ரோட்டோரம் கொட்டப்படும் விவசாய கழிவுகளை தீ வைத்து இருப்பதால் பாதுகாக்கப்பட வேண்டிய மரங்கள் தீக்கிரையாகி வருவதை வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண் அதிகாரிகள் தடுத்து மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் அடிவாரம் வரையிலான விவசாய பகுதிகளில் மானாவரி பயிர்களான எள், உளுந்து உள்ளிட்டவை அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இவற்றைப் பிரித்து எடுப்பதற்கான வசதி இன்றி மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து உலர்த்திய பின் கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். சில நாட்களில் இவற்றில் தீப்பிடித்து பல்வேறு அமைப்பினரால் பாதுகாத்து வளர்க்கப்படும் சாலையோர பச்சை மரங்கள் கருகி தீக்கிரையாவதுடன் மின் வயர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதே நிலை தாலுகா அலுவலகம் அருகே, தாட்கோ காலனி, ராஜூக்கள் கல்லுாரி, அரவிந்த் ஹெர்பல் அருகே, முடங்கியாறு பாலம், வனத்துறை குடியிருப்பு என ரோடு முழுவதும் விவசாய கழிவுகளை விட்டுச் செல்வதும் பின்பு எரிப்பதும் தொடர்கதை ஆகிறது. தற்போதும் அகற்றப்படாமல் பாதி இடங்களில் போட்டு வைத்துள்ள விவசாய கழிவுகளை தீ வைப்பதற்கு முன் மரங்களைக் காக்க மாற்றுத் தீர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை