| ADDED : அக் 14, 2025 06:38 AM
விருதுநகர்: துாய்மை காவலர்களின் மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்துதல் உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.29ல் தற்செயல் விடுப்பு, மறியல் போராட்டம், நவ.24 முதல் வேலை நிறுத்தம், சென்னை இயக்குனரகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறிய தாவது: துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியம் வழங்குதல், 2009 ஜூன் 1 முதல் அரசாணை எண். 234ன் படி மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூ.15 ஆயிரமாக வழங்குதல், ஊராட்சி செயலர்களை மாநில அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இணைத்து ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை எண். 37யை வெளியிட்டும் பணி நிரந்தரம் செய்யப்படாதவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக். 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், மாவட்ட தலைமை அலுவலகங்களில் சாலை மறியல் நடத்தப்படும். நவ. 24 முதல் சென்னை இயக்குனரகத்தில் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது, என்றார்.