அரசு மகப்பேறு மருத்துவனை கட்டட சிமென்ட் பூச்சுகள் சேதம்
விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தின் சுவர்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் கட்டடம் உறுதித்தன்மை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக வந்து செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கட்டடம் மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை திறக்கப்படுவதற்கு முன் இருந்தே செயல்பட்டு வருகிறது.மகப்பேறு மருத்துவமனையின் முகப்பு தோற்றம் நன்றாக இருக்கிறது. ஆனால் கட்டடத்தின் பின்புறம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் சுவர்களில் அதிகப்படியான நீருற்று இருப்பதால் சுவர்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் உறுதித்தன்மை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதியதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் ஏற்கனவே விரிசல், பார்க்கிங் பகுதியின் கூரைகளில் நீருற்று ஏற்பட்டு காணப்படுகிறது. விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டடத்தை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.