பராமரிப்பில்லாமல் சிறுவர் பூங்கா உபகரணங்கள் சேதம்: மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்ப்பு
சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் சிறுவர் பூங்காக்களை பராமரிக்காததால் புதர் மண்டியுள்ளதோடு விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளனர். அவற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் கடந்த காலங்களில் சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காவும் இளைஞர்களுக்காக விளையாட்டு திடலும் அமைக்கப்பட்டது.இதன் காரணமாக ஊராட்சி பகுதிகளில் வசித்து வந்த சிறுவர்களும் இளைஞர்களும் காலை,மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் உடற்பயிற்சி , பூங்காக்களுக்கு சென்று விளையாடி பொழுது போக்கி மகிழ்ந்து வந்தனர்.இந்நிலையில் தற்போது பல ஊராட்சிகளில் இளைஞர்கள் விளையாட்டு திடலும் சிறுவர் பூங்காக்களும் பாழடைந்துள்ளது.இளைஞர்கள் விளையாட்டு திடல்கள் முழுவதும் தற்போது முள் செடி காடு போல வளர்ந்துள்ளது. இதே போல சிறுவர்கள் பூங்காக்களும் அங்கிருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.தற்போது நகராட்சி பகுதிகளில் புதியதாக விளையாட்டு உபகரணங்களுடன் பல்வேறு சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.இவற்றில் காலை மாலை நேரங்களில் நகர் பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் நடுத்தர வயதினர் நடைபயிற்சி மேற்கொள்வதும் விளையாட்டு உபகரணங்களை விளையாடி பொழுது போக்கவும் உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் பல ஊராட்சிகளில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சிறுவர் பூங்காக்கள் விளையாட்டு கருவிகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காக்களுக்கு அழைத்து வந்து பொழுது போக்கும் நிலை உள்ளது.நகராட்சி பகுதியைப் போல ஊராட்சி பகுதியிலும் புதிய சிறுவர் பூங்காக்களை அமைப்பதன் மூலம் அந்தந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை விளையாட வைப்பதற்கு வசதியாக இருக்கும் எனவே ஊராட்சிகள் தோறும் புதிய சிறுவர் பூங்காக்களை அமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.