விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் நட்சத்திர அணிகலன்கள்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டது.இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 4750 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் சுடு மண்ணால் ஆன நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல்பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3 ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் 1.9 மீட்டர் ஆழத்தில், சுடு மண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0. 6 மி.மீ கணமும், 3. 4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: வெம்பக்கோட்டை அகழாய்வு வெளிப்படுத்தும் வைப்பாற்றங்கரை நாகரிகம், ஈராயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு தமிழர்களின் மேம்பட்ட பண்பாடு வணிகம் ஆகியவற்றில் அழுத்தமான சான்றுகளை தருகிறது என்றார்.