உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வைப்பாற்றில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு அச்சத்தில் கரையோர மக்கள்

வைப்பாற்றில் முள் செடிகள் ஆக்கிரமிப்பு அச்சத்தில் கரையோர மக்கள்

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு சாத்துார், எம்.நாகலாபுரம் வழியாகச் சென்று விளாத்திகுளத்தில் கடலில் கலந்து வருகிறது. இந்த நதிநீரை ஆதாரமாகக் கொண்டு பல ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் நடக்கிறது. இந்நிலையில் ஆற்றில் வளர்ந்து வரும் முள் செடிகள் வேகமாக தண்ணீரை உறிஞ்சி விடுவதால் குடிநீர் ஆதாரமாக உள்ள ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. படந்தால் ஊராட்சியில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள முள் செடிகள் வேகமாக குடிநீரை உறிஞ்சி வருவதால் உறை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை உள்ளது. சத்திரப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்து நகர், புதுப்பாளையம், அமீர் பாளையம் உள்ளிட்ட நகர்களில் குடிநீர் வினியோகமும் வைப்பாற்று தண்ணீரை நம்பியே உள்ளது. இந்த ஊராட்சிகளில் தேவையான அளவு குடிநீர் கிடைக்காததால் மக்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆற்றில் மனிதர்கள் யாரும் இறங்க முடியாத அளவுக்கு காடு போல அடர்த்தியாக முள் செடி வளர்ந்து உள்ளது. மேலும் இந்த முள் செடியில் விஷ ஜந்துக்கள் அதிகளவில் தஞ்சம் அடைந்துள்ளன. ஆற்றின் கரையோரம் வீடுகள் கட்டி வசிப்பவர்களின் வீடுகளுக்குள் அடிக்கடி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை