மேலும் செய்திகள்
நீர் வரத்து ஓடையில் முட்புதர்கள்
26-Nov-2024
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் கண்மாய் அருகே நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை மழையின் போது கழிவுகளை நீர்வரத்து ஓடைகளில் கலக்கின்றன. நீர்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாப்பட்டி, சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துாரை சுற்றிய ஊரகப்பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 342 கண்மாய்கள், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 656 கண்மாய்கள், மீதமுள்ள 12 கண்மாய் என மொத்தம் 1010 கண்மாய் உள்ளது.இதில் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் நீர்வரத்து ஓடைகள் அருகே உணவுப்பொருள், பருப்பு மில் உள்பட பல ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வெளியேறும் கழிவுகளை தங்கள் நிறுவன வளாகத்தில் சுத்திகரிப்பு செய்து அகற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் நீர்வரத்து ஓடைகளில் வெளியேற்றி வருகின்றன.இந்த கழிவு நீர் வெயில் காலத்தில் வற்றி கலந்த தடம் தெரியாமல் போகிறது. ஆனால் மழைக்காலத்தில் நீர் நிலைகளில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்த மாசடைந்த நீரில் குளிப்பவர்களுக்கு அலர்ஜி, உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுகிறது.மேலும் ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர் ஆதாரமாக இருப்பதால் நீரின் தன்மை மாறி வீடுகளுக்கு விநியோகம் செய்யும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் பலரும் வாகனங்களில் வரும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.எனவே கண்மாய் நீர்வரத்து ஓடைகளில் கழிவு நீர் கலக்கும் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
26-Nov-2024