ஆபத்தான வளைவுகளில் குவிலென்ஸ் அத்தியாவசியம்
மாவட்டத்தில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், காரியாபட்டி -மதுரை நரிக்குடி, பார்த்திபனுார் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக செல்லும் முக்கிய ரோடுகளில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. வளைவுகளில் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை கவனிக்காமல் வருவதால், நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் எளிதில் கண்டறியும் வகையில் வளைவு ரோடுகள், சந்திப்பு ரோடுகள், அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், குவி லென்ஸ் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் இடங்களில் குவி லென்ஸ்கள் பொருத்த நெடுஞ்சாலைத்துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். ஓரளவுக்கு விபத்து நடப்பது குறைந்தது. இந்நிலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வரும் அதே வேளையில் விபத்துகளும் அதிகரிக்கின்றன.வளைவுகள், நெரிசல் மிக்க ரோடுகளில் போக்குவரத்து அதிகரிப்பால் பல்வேறு இடங்களில் குவி லென்ஸ்கள் பொருத்தப்பட வேண்டியிருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஏற்கனவே பொருத்திய குவி லென்ஸ்கள் தூசி படிந்து கண்ணாடிகள் உடைந்து எதிரே வரும் வாகனங்களை காட்டாமல் பெயரளவில் உள்ளது, சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிந்தும் கண்டும், காணாமல் இருக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதிகளில் விபத்துக்கள் நடக்கின்றன. ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் குவிலென்ஸ்கள் சேதமடைந்து திசை மாறி உள்ளது.முலாம் பூச்சுகள் தேய்ந்து எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுவதால் விபத்து ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் இன்னும் ஆபத்தாக உள்ளது. விபத்தை தடுக்க குவி லென்ஸ் பொருத்துவது அத்தியாவசியமானதாக இருப்பதுடன், ஏற்கனவே பொருத்தப்பட்ட இடங்களில் கண்ணாடிகள் உடைந்தும், திசை மாறியும், முலாம் பூச்சு தேய்ந்தும் இருப்பதை பராமரிப்பதும் அவசியமாகிறது.