உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தெற்காற்றில் ஆபத்தான பள்ளங்கள் விபத்திற்கு முன் மூட எதிர்பார்ப்பு

தெற்காற்றில் ஆபத்தான பள்ளங்கள் விபத்திற்கு முன் மூட எதிர்பார்ப்பு

காரியாபட்டி: காரியாபட்டி நெடுங்குளம் அருகே ஓடும் தெற்காற்றில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளதால் விபத்திற்கு முன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி நெடுங்குளம் அருகே தெற்காறு ஓடுகிறது. ஏராளமான மணல் கிடந்தன. அதன்பின் மணல் எடுக்கப்பட்டு கட்டாந்தரையானது. அதற்குப்பின் ரோடு பணிகளுக்காக அங்கு கிராவல் மண் எடுக்கப்பட்டு, ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்களாக உள்ளன. தற்போது சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. பள்ளங்களில் மழைநீர் தேங்கி, இருப்பது தெரியாமல் உள்ளன. ஊரை ஒட்டி இருப்பதால் சிறுவர்கள் அடிக்கடி அப்பகுதிக்கு சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் தண்ணீரில் குதித்து விளையாட முற்படுகின்றனர். அறியாமையில் அப்பகுதிக்கு செல்பவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. புதர் மண்டி கிடப்பதால் எளிதில் வெளியேற முடியாது. ஏற்கனவே சிலர் குளிக்கச் சென்ற போது பள்ளத்தில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மழை நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வரும்போது குளிக்க சென்று விபத்தில் சிக்க நேரிடும். விபத்திற்கு முன் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !