மேலும் செய்திகள்
வன உயிரின வார விழா
04-Oct-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தொடரும் மான் , வனவிலங்குகள் வேட்டையை தடுக்க போதிய அளவிற்கு வனத்துறையினர், கூடுதலான எண்ணிக்கையில் வேட்டை தடுப்பு காவலர்களை நியமித்து கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் விரும்புகின்றனர். தேவதானத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை புலிகள் காப்பக மலைப்பகுதி நீடிக்கிறது. இந்த மலைப்பகுதியில் புலிகள் கரடி, யானைகள், சாம்பல் நிற அணில்கள் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளது. இவற்றைக் காக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் தலைமையில் நான்கு வனச்சரகர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், அதனையும் மீறி சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்குள் புகுந்து வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மான் வேட்டையில் தொடர்ந்து சமூக விரோத கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற ஜாமின் பெற்று மீண்டும் வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டை என்பது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இதனை தடுக்க கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமித்தும் மலையடி வாரத்தில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்தும், விவசாயிகள் அல்லாத தனி நபர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு செல்வதை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
04-Oct-2025