பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம்
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் மகாதேவ அஷ்டமி மற்றும் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து நுாதன முறையில் வழிபாடு நடந்தது. ராஜபாளையம் சர்வ சமுத்திர அக்ரஹாரம் தெருவில் சந்தான வேணுகோபால கிருஷ்ணசாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி மற்றும் கால பைரவ ஜெயந்தி முன்னிட்டு நேற்று காலையில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யும்போது புத்திர பாக்கியம் திருமண தடை மற்றும் வியாபார விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.எனவே ஆண்கள் பெண்கள் வித்தியாசம் இன்றி பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இலைகளை தலையில் வைத்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் ஏகாதச ருத்ராபிஷேக பூஜை நடைபெற்றது.* வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கும்ப ஜபம், ஏகாதச பாராயணம், ஸ்ரீ ருத்ர ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு 18 வகை அபிஷேகங்கள் மகாதீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.