தினமலர் செய்தி எதிரொலி: திருத்தங்கலில் 10 ஆண்டுகளுக்குப்பின் செயல்பாட்டற்கு வந்த சுகாதார வளாகம்
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் மகளிர் சுகாதார வளாகத்தில் பராமத்து பணிகள் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.சிவகாசி அருகே திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. நாளடைவில் சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லாததால் அப்பகுதி பெண்கள் திறந்த வெளியினை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். தவிர சுகாதார வளாகத்தில் மராமத்து பணி என்ற பெயரில் பெயிண்ட் மட்டும் அடிக்கப்பட்ட நிலையில் வேற எந்த பணியும் நடைபெறவில்லை. தண்ணீர், மின்சார வசதி இல்லாததால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதம் அடைந்த கதவுகள் சரி செய்யப்பட்டு தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை மேயர் சங்கீதா திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனால் அப்பகுதி பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கமிஷனர் கூறுகையில், இதுபோன்று பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் கூடிய விரைவில் மறுசீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.