மேலும் செய்திகள்
பேரூராட்சி கடைகளின் ஏல தேதி ஒத்திவைப்பு
29-May-2025
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் வாகன நிறுத்தும் இடங்கள், சுகாதார வளாகங்கள், வணிக கடைகள் ஆகியவற்றிற்கான ஒப்பந்தம் எடுப்பதற்கான ஏலத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வியாபாரிகள் மக்கள் எதிர்பார்க்கின்றனர். வாடகை யை குறைத்து வணிக வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் கடைகள்,வாகன நிறுத்துமிடம், சிவன் கோயில் மாடவீதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கடைகள், டூவீலர் காப்பகம், வேன் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் , தொலைக்காட்சி விளம்பரம் உரிமை, பொது கட்டண கழிப்பிடங்கள், மீன் மார்க்கெட், மாநகராட்சி வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலம் விடப்படும். இவற்றில் 15 இனங்களுக்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் 2024 முதல் 2027ம் ஆண்டு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்த ஏலம் 2024 பிப். ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள், புதியவர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஏல தொகைக்கான வங்கி டி.டி உடன் விண்ணப்பித்த நிலையில் ஒப்பந்த ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோன்று தொடர்ந்து மூன்று முறை ஒப்பந்த ஏலம் ஒத்திவைக்கப்பட்டதால் வியாபாரிகள், மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.ஏலம் விடப்பட்டிருந்தால் மாநகராட்சிக்கு டெபாசிட் தொகை மட்டும் ரூ. ஒரு கோடி வரை வருமானம் கிடைத்திருக்கும். இந்த வருமானம் கிடைக்காததால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளும் பாதிக்கப்படுகின்றது.இந்நிலையில் இவற்றிற்கான ஏலம் விடப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தி ஏலம் விட வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதே சமயத்தில் ஒரு சில வணிக வளாகங்களில் வாடகை அதிகமாக உள்ளதால் யாரும் ஏலம் எடுக்கவும் முன் வரவில்லை. இது போன்ற வணிக வளாகங்களில் வாடகை குறைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
29-May-2025