சுருக்கெழுத்து புதிய பாடத்திட்ட வினாக்கள் மாதிரி படிவம் வெளியிடாததால் அதிருப்தி
விருதுநகர்: சுருக்கெழுத்து தேர்விற்கான புதிய பாடத்திட்ட வினாக்களின் மாதிரி படிவம் வெளியிடப்படாததால் மாணவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்க தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தமிழக அரசின் தொழில் நுட்பக்கல்வி இயக்கம் வழங்கும் ஆங்கில சுருக்கெழுத்து இளநிலை தேர்ச்சி சான்றிதழை தெலுங்கானா மாநிலத்தின் கல்வித்துறை தங்கள் கல்வி தரத்திற்கு இணையாக இல்லை என கூறி ஏற்க மறுத்தது.தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சுருக்கெழுத்து பாடத்திட்டத்தை சுருக்கி, கல்வித் தரத்தை குறைத்ததை அரசு தற்போது உணர்ந்துள்ளது. இதனால் வணிகவியல் கல்வி வல்லுநர் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 2025 பிப்ரவரியில் நடக்கும் தேர்விற்கு புதிய பாடத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என ஆக., 31ல் தொழில் நுட்பக்கல்வி இயக்க ஆணையர் அறிவித்தார்.ஆனால் அறிவிப்பு வெளியாகி 50 நாட்களாகியும் புதிய பாடத்திட்ட வினாக்களின் மாதிரி படிவம் வெளியிடப்படாததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதனால் பயிற்றகங்களில் பயிலும் மாணவர்கள் தமிழக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே புதிய பாடத்திட்ட வினாக்களின் மாதிரி படிவத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.