வெப்ப அலை தாக்கம் தற்காப்பு வழிமுறைகள் மாவட்ட சுகாதார அலுவலர் அறிவிப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருவதால் வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும் நிலை உண்டாகியுள்ளது. இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள பருத்தி ஆடைகள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், தண்ணீர் எடுத்துக் கொள்வது அவசியமாகியுள்ளது.மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பகலில் வெயில், இரவில் காற்று, இடி, மின்னலுடன் மேகங்கள் தென்பட்டாலும் மழை பொழிவு இல்லை.இதனால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வுகள் முடிந்த பின் மதிய வேளையில் வெயிலுடன் வீடு திரும்புகின்றனர். இதனால் மாணவர்கள் உடலின் நீர்ச்சத்து குறைந்து வீட்டிற்கு வரும் போதே சோர்வுற்ற நிலையில் வருகின்றனர்.இது குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி கூறியதாவது: வெயிலில் வெளியே செல்பவர்கள் அடிக்கடி தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஆரஞ்சு, திராட்சை, அண்ணாசி, வெள்ளரி, கீரை, எலுமிச்சை பழச்சாறு, லஸ்ஸி ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தளர்வான பருத்தி ஆடைகள் அணிவது சிறந்தது. கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் பாதிக்கப்பட்டவர்கள், வெளியில் வேலைக்கு செல்பவர்கள் வெப்பமான சூழலுக்கு ஏற்ப உடலை பழக்கப்படுத்த வேண்டும்.அதிலும் மதியம் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். பணிபுரியும் இடங்களில் வெப்பம் தொடர்பான நோய், வெப்ப அழுத்தத்தின் அறிகுறிகளை தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள பயிற்சிகள் அளிக்க வேண்டும்.மனித உடல் சாதாரணமாக 36.4 டிகிரி செல்சியஸ் முதல் 37. 2 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிக வெளிப்புற, உட்புற வெப்பநிலை வெப்ப அழுத்தத்தை துாண்டுவதால் இதயம், சுவாசம், சிறுநீரக நோய்கள் ஆகிய நாட்பட்ட நோய்கள் அதிகரிக்கலாம். எனவே முடிந்த வரை நல்ல காற்றோட்டம், குளிர்ந்த இடங்களில் இருப்பதும், தேவையான தண்ணீர் குடிப்பது சிறந்தது, என்றார்.