நெசவாளர்களை ஏமாற்றிய தி.மு.க., அரசு நயினார் நாகேந்திரன் பேச்சு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நெசவாளர்களின் கடன் வட்டியை குறைப்போம் என கூறி ஏமாற்றிவிட்டது தி.மு.க., அரசு என விருதுநகரில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனும் தலைப்பில் விருதுநகரில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: எல்லா குழந்தைகளையும் படிக்க வைத்தவர் காமராஜர். இதே மாவட்டத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் 1500 மாணவர்கள் பிளஸ் 2வுடன் நின்று விட்டனர். கவுசிகா நதியை சீரமைப்போம், ரூ.10 ஆயிரம் கோடிக்கு நீர்மேலாண்மை அமைப்போம், ஒன்றியம் தோறும் தானியக் கிடங்குகள், எல்லா நதிகளிலும் தடுப்பணைகள், அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். கூட்டுறவு சங்கம் அமைத்து அதன் மூலம் வட்டி குறைப்போம் என்றனர். இதுவரை குறைக்கவில்லை. தி.மு.க., அரசு அவர்களை ஏமாற்றி விட்டது. 16 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு மத்திய அரசு தந்துள்ளது. எட்டரை லட்சம் விவசாயிகளுக்கு ரூ.157 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ரேஷன் கடையில் பொருட்களை இலவசமாக தருவது மத்திய அரசு தாங்கள் தருவதாக ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது தி.மு.க., அரசு. இதே மாவட்டத்தில் 13 ஆயிரத்து 800 பிரதமர் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. 69 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம் தரப்பட்டுள்ளது. 73 ஆயிரத்து 780 பேருக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் காப்பீடு வழங்கியுள்ளது. முன்னேறத்துடிக்கும் மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.22 கோடி தந்துள்ளது. இ.குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்காவை கொண்டு வந்தது. ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தர உள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லுாரிகளை தந்தது பிரதமர் மோடி. பெற்று தந்தது பழனிசாமி. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும். தற்போதைய தி.மு.க., அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை. கஞ்சா போதை புழக்கம் அதிகரித்து விட்டது. எதிர்காலத்தை காக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும், என்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, ராமஸ்ரீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.பி., கே.எஸ். ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க, மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பங்கேற்றனர்.