பயன்பாட்டிற்கு வந்து 10 மாதத்தில் தள்ளும் நிலையில் எலெக்டரிக் குப்பை வண்டிகள்
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு மஞ்சள் நிற எலெக்ட்ரிக் குப்பை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து 10 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் பழுது ஏற்பட்டு தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியங்கள் தோறும் 2024 ஆக. மாதம் 50 முதல் 100 வரையிலான எலெக்ட்ரிக் குப்பை வண்டிகள் மஞ்சள் நிறத்தில் கொண்டு வரப்பட்டன. இவை 2025 பிப். வரை ஒன்றிய அலுவலகங்களிலே காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பிப். ல் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னிலையில் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டன. இந்த எலெக்ட்ரிக் பேட்டரி வண்டிகளால் ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நிவர்த்தி கிடைத்தது. காரணம், சிறப்பு நிலை, முதல் நிலை ஊராட்சிகளில் நிறைய உட்கடை கிராமங்கள் இருக்கும். அதிக தொலைவு இடைவெளியில் வீடுகள் இருக்கும். இதனால் தள்ளுவண்டிகளில் குப்பை அள்ளி வந்த துாய்மை பணியாளர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக இருந்தன. இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் வழங்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களே பேட்டரி பழுதாகி ஓரங்கட்டப்பட்டு, அவர்கள் தள்ளுவண்டி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஊரக எலெக்ட்ரிக் வாகனங்களை தரமான முறையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்தது. இருப்பினும், அவையும் தற்போது பழுதாகி பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளன. இதனால் பல ஊராட்சிகளில் வழங்கப்பட்டு 10 மாதங்களே ஆன இந்த எலக்ட்ரிக் வாகனங்களால் துாய்மை பணியாளர்கள் திண்டாடி வருகின்றனர். அவற்றை தள்ளிக் கொண்டு குப்பை அள்ளும் நிலை உள்ளது.