| ADDED : பிப் 09, 2024 04:01 AM
சிவகாசி: மாவட்டத்தில் நகர், கிராமப் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத சிறு மின் விசை பம்புகளுக்கு உள்ள மின் இணைப்புகளுக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் செலுத்தப்படுவதால் பணம் வீணடிக்கப்படுகிறது, எனவே பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத சிறு மின்விசை பம்புகளுக்கான மின் இணைப்புகளை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் ஊராட்சி பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவைக்காக சிறு மின்விசை பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் பல ஆண்டுகளாக சிறு மின்விசைப்பம்புகள் பயன்பாட்டில் இல்லை. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளால் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. எனவே இதற்காக உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த பட்ச மின் கட்டணம் செலுத்தப்படுகின்றது. இதனால் எந்த பயன்பாடும் இல்லாமலேயே பணம் வீணடிக்கப்படுகின்றது. சிவகாசி மாநகராட்சியில் தங்கையா தெரு, பிச்சாண்டி தெரு, அம்மன் கோவில்பட்டி நடுத்தெரு, பாரதி நகர், வேலாயுதம் ரோடு பெரிய பிள்ளை ராவுத்தர் தெரு உள்ளிட்ட 28 இடங்களில் உள்ள சிறு மின்விசைப்பம்புகள் பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லை. ஆனால் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்தபட்ச மின் கட்டணம் தற்போது வரையிலும் செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே இந்த 28 இடங்களிலும் மின் இணைப்புகளை நிரந்தர துண்டிப்பு செய்ய மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே நிலைதான் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டில் இல்லாத சிறு மின்விசை பம்புகளுக்கு மின் கட்டணம் செலுத்தப்படுகின்றது. எனவே தண்ணீர் ஆதாரமுள்ள மின்விசை பம்புகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீணாக உள்ள மின்விசை பம்புகளுக்கு மின் இணைப்புகளை நிரந்தர துண்டிப்பு செய்து பணம் வீணடிப்பதை தடுக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பணத்தில் மற்ற வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும்.