க்யூ.ஆர்., கோடு செயலி வழியாக விடுப்பு வழங்க எதிர்பார்ப்பு: போலீசாருக்கு வார விடுப்பு பதிவு நடைமுறையில்
மாவட்டத்தில் போலீசாருக்கு வார விடுப்பு வழங்கும் நடைமுறை ஸ்டேஷன்களில் நோட்டில் பதிவு செய்யப்பட்டு சுழற்சி முறையில் இன்ஸ்பெக்டர்கள் ஒப்புதலுடன் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியஸ்தர்கள் வருகை, பண்டிகை நாட்கள், திருவிழாக்களில் பாதுகாப்பு பணிகளுக்கு போலீசார் தேவைப்படும் போது வார விடுப்பு மாற்றி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஓரிரு நாட்கள் கழித்து மாற்றி வார விடுப்பு எடுக்கும் போது சக போலீசாருக்கான வார விடுப்பு நாளாக இருந்தால் மற்றொரு நாளை வார விடுப்பாக எடுக்க வேண்டிய நிலையே நீடிக்கிறது. ஸ்டேஷனில் யார், யாருக்கு எந்த நாள் விடுப்பு உள்ளிட்ட விவரங்கள் தனி நோட்டில் பதிவு செய்யப்பட்டு கையாளப்படுகிறது. அரசின் அனைத்துத்துறை அலுவலக பணிகளும் கணினிமயமாகி வரும் இன்றைய காலத்தில் போலீசாரின் வார விடுப்பு நோட்டு பதிவில் இருப்பதால் வார விடுப்பு எடுப்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதை போக்க விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் வார விடுப்புக்கான க்யூ.ஆர். கோடு' செயலியை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த செயலியை 'க்யூ.ஆர்.,' கோடு வடிவில் ஸ்டேஷன்களில் இடம்பெற செய்தால் போலீசார் தங்களின் அலைபேசியில் ஸ்கேன் செய்து தங்களின் வார விடுப்பு நாளை பதிவு செய்தல், மாற்றி எடுத்தல், யார், யாருக்கு எந்த நாளில் வார விடுப்பு வழங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அலைபேசியில் சரிபார்த்து கொள்ளலாம். மேலும் ஒப்புதல் வழங்கும் இன்ஸ்பெக்டர்களும், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து யாருக்கு விடுப்பு வேண்டும், தேவையான நாளில் எத்தனை பேர் பணியில் இருப்பார்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கண்காணித்து முடிவுகள் எடுக்க முடியும். நோட்டு பதிவு நடைமுறை கைவிட்டு முழுவதும் ஆன்லைன் நடைமுறையாக மாற்றுவதால் விவரங்கள் அனைத்தும் நேரடியாக மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணித்து கொள்ள முடியும். எனவே விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு வார விடுப்புக்கான க்யூ.ஆர்., கோடு செயலியை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.