வி.ஏ.ஓ., அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் எதிர்பார்ப்பு; சான்று பெற வரும் மக்களும் திண்டாடும் நிலை
மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்களுக்கு அரசு கட்டடங்களும், சிலர் வாடகை கட்டடங்களிலும் அலுவலகங்களை இயக்கி வருகின்றனர். கட்டி கொடுக்கப்பட்ட அலுவலகங்கள் பழசாகி விட்டதால் கூரை சேதமாகி காணப்படுகிறது. மழைக்காலங்களில் அச்சத்துடனே பணிபுரிகின்றனர். மேலும் சான்று கையெழுத்து வாங்க வரும் மக்களும் பயப்படுகின்றனர். இதற்கு பயந்து வி.ஏ.ஓ.,க்கள் சிலர் வாடகை கட்டடங்களை பயன்படுத்தி வருகின்றனர். பெண் வி.ஏ.ஓ.,க்கள் அதிகம் உள்ளனர். இன்றளவும் கிராமப்புறங்களில் கழிப்பறை என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. இதனால் ஊர் மக்களின் கழிப்பறையையும் அடிக்கடி பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அரசு கழிப்பறைகளை கட்டி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என பல வி.ஏ.ஓ.,க்கள் கருதுகின்றனர். சில அலுவலகங்களில் மின் இணைப்பு இல்லை. இதனால் மின்விசிறி கூட இல்லாத சூழலும் உள்ளது. இவை தவிர பணிரீதியாகவும் வி.ஏ.ஓ.,க்கள் சில சிரமங்களை அனுபவிக்கின்றனர். விளைநிலங்களுக்கு சென்று விவசாய விபரங்களை இணையத்தில் பதிவிட டிஜிட்டல் கிராப் சர்வே செய்வதற்கு காரிப், ராபி, தாலடி, சம்பா ஆகிய பருவகால சாகுபடி கணக்கெடுப்புகளுக்கு அதிக மின் தேக்கு திறன், உயர் வெப்ப நிலையில் இயங்கக்கூடிய தரமான டேப்லட் உபகரணங்கள் அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. வி.ஏ.ஒ.,முன்னேற்ற சங்கத்தின் இணை மாவட்ட செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: சேதமடைந்த வி.ஏ.ஓ., கட்டடங்களை கணக்கெடுத்து சரி செய்ய வேண்டும். மின் இணைப்பு வழங்கி தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதிக பிரதிகள் எடுக்கும் சக்தி கொண்ட முன்னணி நிறுவனங்களின் நல்ல தரமான பிரிண்டர் கருவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.