காரியாபட்டி கழுவனச்சேரிக்கு பஸ் வரும் நேரங்களை மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி : காரியாபட்டி கழுவனச்சேரிக்கு வரும் பஸ்களின் நேரத்தை மாற்றி அமைக்க கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர். நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் தவியாய் தவித்து வருகின்றனர். காரியாபட்டி கழுவனச்சேரிக்கு மதுரையிலிருந்து டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலை 5 :45, இரவு 9:45க்கு இருவேளை வந்து செல்கிறது. இங்குள்ள மக்கள் ஏராளமானோர் கூலி வேலைக்கு வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளியூர்களில் படிக்கின்றனர். ஆனால் இரு வேளைகளில் வரும் பஸ்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை. இதனால் மாணவர்கள், வயதானவர்கள் நீண்ட தூரம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இயக்கப்படும் பஸ்சும் ஊருக்குள் வருவது கிடையாது. அங்குள்ள விலக்கில் திரும்பி சென்று விடுகின்றனர். அதனால் யாருக்கு எந்த பயனும் இல்லாததால் பஸ் நேரத்தை மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கிராமத்தினரின் நலனை கருத்தில் கொண்டு காலை 8.30, மதியம் 2:00, மாலை 4:30 மணிக்கு என நேரத்தை மாற்றி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.