கரும்புக்கு ஊக்கத்தொகை அறிவித்தும் பலனில்லை விவசாயிகள் ஏமாற்றம்
ராஜபாளையம் : தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவித்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லை என தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி நீர்நிலை அதிகம் என்பதால் கண்மாய், ஆற்று நீர் தேக்கங்கள் அருகே நெல்லும் அதனை அடுத்து கரும்பு விவசாயம் அதிக சாகுபடி நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன் சுமார் 8000 ஏக்கர் கரும்பு சாகுபடி நடந்தது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகிரி சுற்றுவட்டார விவசாயிகள் சிவகிரி அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து அனுப்பி வந்தனர். இதில் 2018 --19ல் சப்ளை செய்த சுமார் 500 விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை. இதனால் தொடர் பிரச்சினைகளால் சாகுபடி பணிகளுக்கு செலவழிக்க முடியாமல் தரிசாக விட்டுள்ளனர்.ஐந்து ஆண்டு தொடர் போராட்டங்களால் பாதி தொகையான ரூ.12 கோடி மட்டும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு தவணை தேதியை கடந்து வருகிறது. தற்போது 2000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே கரும்பு பயிரிட்டு அதிக அளவில் வெல்லம் வியாபாரிகளுக்கு மாற்றி விடுகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.255 ல் இருந்து ரூ.349 என உயர்த்தியதால் ரூ.3500 என கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காது என்ன தெரிவித்துள்ளனர். இது குறித்து சஞ்சீவி ராஜா கூறியதாவது: கரும்பு விவசாயிகளின் நிலையை இப்பகுதி ஆளுங்கட்சியினர் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே சாகுபடி பரப்பு 30 சதவீதமாக சுருங்கிவிட்டது. தேர்தல் அறிக்கையில் டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க நடவடிக்கை எனக் கூறி 4 ஆண்டுகளைக் கடந்து தற்போது தான் ரூ.3500 வந்துள்ளனர். மாற்று விவசாயத்திற்கும் அரசின் முறையான ஒத்துழைப்பு இல்லாமல் உயர்த்தப்பட்ட அறிவிப்பு நிலுவைத் தொகை கேட்டு போராடிவரும் இப்பகுதி விவசாயிகளுக்கு எந்தப்பலனும் இல்லை.