உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் ஆட்டுச்சந்தை ஏற்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

காரியாபட்டியில் ஆட்டுச்சந்தை ஏற்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

காரியாபட்டி : காரியாபட்டியில் ஆட்டுச் சந்தை ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதற்கான முயற்சிகளை பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.காரியாபட்டி முதல் நிலை பேரூராட்சியாக உள்ளது. சுற்றியுள்ள 150 க்கு மேற்பட்ட கிராமத்தினர் தோட்ட விவசாயம் செய்கின்றனர். காய்கறிகள் உள்ளிட்டவைகளை விளைவித்து ஊர் ஊராக சுற்றி விற்பனை செய்து வருகின்றனர். வீண் அலைச்சல், பணம் விரயம், கூடுதல் விலைக்கு விற்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன் தோட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர்.இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் போது ஆடுகளை விற்பனை செய்து அவசர தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆடுகளை விற்பனை செய்ய பல்வேறு ஊர்களை தாண்டி மல்லாங்கிணர், தோணுகால், முடுக்கன்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றனர். இங்கு ஆடுகள் வாங்க வருபவர்கள் குறைவு.இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரியாபட்டியில் ஆட்டுச் சந்தை, காய்கறி சந்தை ஏற்படுத்தினால் பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் ஆடு, காய்கறி, கோழி உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்ல ஏதுவாக இருக்கும்.காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டு சந்தை ஏற்படுத்தப்படும் என ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. தற்போது கிடப்பில் உள்ளது. இங்கே ஏராளமான அரசு புறம்போக்கு இடங்கள் உள்ளன. அதனை கண்டறிந்து ஆட்டுச் சந்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆட்டுச் சந்தை, காய்கறி சந்தை நடைபெற்று வரும் கிராமங்களின் வார நாட்களை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் நாட்களை தேர்வு செய்து வாரச்சந்தை, ஆட்டுச் சந்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ