உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருந்துக்கு பயன்படும் கண்ணுபிள்ளை செடி வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

மருந்துக்கு பயன்படும் கண்ணுபிள்ளை செடி வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

காரியாபட்டி : மருந்துக்கு பயன்படுத்தப்படும் காடுகளில் தானாக வளரும் கண்ணுபிள்ளை செடியால் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரியாபட்டி, நரிக்குடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முடிந்தவுடன் வருமானம் இன்றி, 6 மாதங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் தவிப்பர். இந்நிலையில் காடுகளில் தானாக முளைத்து கிடக்கும் கண்ணுபிள்ளை செடியால் வருமானம் இருப்பதை சில விவசாயிகள் அறிந்து அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக தை மாதம் வளரும் இந்த செடிகளை தைப்பொங்கல் அன்று வீடு, தொழில் நிறுவனங்கள், வாகனங்களில் காப்பு கட்ட பயன்படுத்துவர். அதற்குப்பின் இதனை தேடுவார் யாரும் கிடையாது. கண்ணுபிள்ளை செடி பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சிறுநீரக கற்களை கரைக்கவும், சிறுநீரக கோளாறு, மாதவிடாய், சரும பிரச்னைகளை சரி செய்ய மருந்தாக பயன்படுகிறது. நரிக்குடி, சாயல்குடி பகுதியில் பெண்கள் இச் செடி அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கிலோ ரூ.5 முதல் 8 வரை விலைக்கு வாங்கி விவசாயிகள் சேகரிக்கின்றனர். விருதுநகரில் செயல்படும் தொழிற்சாலைக்கு மினி லாரியில் கொண்டு செல்கின்றனர். இத் தொழிலால் பெரும்பாலான விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்தனர்.மாரிச்சாமி, விவசாயி, கூறியதாவது, விவசாயம் முடிந்து 6 மாதம் வருமானம் கிடையாது. எப்படியாவது வருமானம் பார்க்க வேண்டும். காப்பு கட்ட மட்டுமே பயன்படுத்தப்படும் கண்ணுபிள்ளை செடிகளிலிருந்து மூலிகை மருந்து தயாரிக்க தேவைப்படுவதை அறிந்து அதனை விவசாயிகள் ஒன்று சேர்ந்து, பெண்களை அறுவடைக்கு பயன்படுத்தி, விலைக்கு வாங்கி மொத்தமாக சேகரிப்போம். வாடகை மினி லாரியில் தொழிற்சாலைக்கு கொண்டு செல்கிறோம். கிலோ ரூ. 15 வரை விலை போகிறது. ஓரளவுக்கு வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை