உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கரைகள் சேதம், துார்வாராததால் பாதிப்பு வேதனையில் பெரிய வையம்பட்டி கண்மாய் விவசாயிகள்

கரைகள் சேதம், துார்வாராததால் பாதிப்பு வேதனையில் பெரிய வையம்பட்டி கண்மாய் விவசாயிகள்

காரியாபட்டி : மடைகள் கரைகள், சேதம், நீர்வரத்து ஓடைகள், கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, துார்வாராததால் மேடாகி போனதால் நீரை தேக்கி விவசாயம் செய்ய முடியாமல் மாந்தோப்பு பெரிய வையம்பட்டி கண்மாய் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். காரியாபட்டி மாந்தோப்பு பெரிய வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 3 மடைகள் உள்ளன. 300 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. நீர்வரத்து ஆதாரமாக காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் உப்போடை வழியாக கண்மாய் வந்து சேரும். ஒருமுறை நிரம்பினால் போதும், இருபோகம் விவசாயம் செய்தனர். நாளடைவில் மழை அளவு குறைந்து கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது. ஓடைகளும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயின. அவ்வப்போது மழை பெய்தாலும், கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது. விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக போட்டனர். தற்போது வயல்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. கண்மாய் மேடாக இருப்பதால் சிறிதளவு மழை நீரையும் தேக்க முடியவில்லை. ஓடைகள் வழியாக வீணாக வெளியேறுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டது. வாய்க்கால்கள், மடைகள் சேதமடைந்தன. சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் கண்மாய் இருக்கும் அடையாளமே தெரியாமல் உள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தூர்வாரி 15 ஆண்டுகள் குருவு, விவசாயி: 15 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் தூர்வாரப்பட்டது. 3 மடைகள் சேதமடைந்து காணாமல் போயின. வாய்க்கால்கள் சேதமடைந்தது. அங்கிருந்த முண்டு கற்களை திருடி செல்கின்றனர். விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக கிடக்கின்றன. இருபோகம் விளைந்த வயல்களில், தற்போது விவசாயம் செய்ய முடியாததால் வேதனையாக உள்ளது. ஓடைகளை மீட்க வேண்டும்: காந்தி, விவசாயி: இக்கண்மாய்க்கு நீர் வரத்துக்கு முக்கிய வழித்தடமாக உப்போடை, காட்டுப்பகுதி ஓடைகள் இருந்தன. அதன் கரைகளை சேதப்படுத்தியதோடு, ஆக்கிரமிப்பால் காணாமல் போயின. அவ்வப்போது மழை பெய்தும், வரத்து ஓடை இன்றி மழை நீர் வீணாக வெளியேறி வருகிறது. கண்மாய்க்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காணாமல் போன ஓடைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீரமைக்க வேண்டும் பால்சாமி, விவசாயி: கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, தூர்வார வேண்டும். சேதமடைந்த கரைகள், வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். விளைச்சல் கண்டு 15 ஆண்டுகள் ஆகின. விவசாயத்தை தொடர நீர் வரத்து ஓடைகளை சீரமைப்பதுடன், குண்டாற்றில் அணை கட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வார விரைவில் நிதி ஜெயராம், பி.டி.ஓ.,: காரியாபட்டி ஒன்றியத்தில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன: இந்த முறை 31 கண்மாய்கள் கணக்கெடுக்கப்பட்டு தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு 12 கண்மாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது மாந்தோப்பு கண்மாய் தூர்வார நிதி ஒதுக்கப்படும். உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பு தருவதில் பிரச்னை இருந்து வருகிறது. அதனை சரி செய்து விரைவில் தூர்வாரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை