தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் மகசூல் பாதிப்பு தவிப்பில் விவசாயிகள்
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வீரியம் குறைந்ததாகவும், தரமற்றதாகவும் இருப்பதால் அதனை வாங்கி பயன்படுத்திய விவசாயிகள் கடும் மகசூல் பாதிப்பிற்கும், பொருளாதார இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.பயிர்களில் ஏற்படும் நோய், புழுக்கள் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், பயிர்களோடு வளரும் களைச்செடிகளை கட்டுப்படுத்தவும், விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி தெளிப்பான் மூலம் தெளித்து அவற்றை கட்டுப்படுத்துகின்றனர்.முன்பு ரசாயன ஆலைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்போது குடிசைத் தொழில் போல் நடக்கிறது. சரியான கண்காணிப்பு எதுவும் இன்றி இந்த மருந்துகள் விற்கப்படுவதால் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வீரியம் இல்லாத மருந்துகளும், ஒரு சில சமயங்களில் தேவைக்கு அதிகமான வீரியம் கொண்ட மருந்துகளும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்திய விவசாயிகள் நோயை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து பகுதிகளையும் நோய் தாக்குதலுக்கு பலி கொடுத்து வருகின்றனர்.சில சமயங்களில் வீரியம் அதிகம் கொண்ட மருந்துகளை பயன்படுத்தும் போது பயிர்களையும் கருகச் செய்து விடுகிறது. தரமற்ற மருந்துகளால் களைகளை கட்டுப்படுத்த முடியாமல் அவற்றை முழு அளவில் அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் மகசூல் இழப்புக்கும், பொருளாதார விரயத்திற்கும், இரட்டிப்பு செலவிற்கும் ஆளாகி வருகின்றனர்.வத்திராயிருப்பு விவசாயி பிரகலாதன் கூறுகையில், தற்போது தரமற்ற மருந்துகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. எனது மூன்று ஏக்கர் நெற்பயிருக்கு 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து களைக்கொல்லி மருந்து வாங்கி அடித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் வேலை ஆட்களை பணியமர்த்தி களைச்செடிகளை அப்புறப்படுத்தியதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனவே வேளாண்துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.