குறுகலான கிராம ரோடுகளால் அச்சம்
காரியாபட்டி: கிராமப்புறங்களுக்கு செல்லும் ரோடுகள் ஒரு வழிப்பாதையாகவும் குறுகலாகவும் இருப்பதால் பஸ் போக்குவரத்து தடைபடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. விரிவான ரோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி பகுதியில் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. பஸ் பிடிக்க பல கி.மீ., தூரம் நடக்க வேண்டும். பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பல்வேறு கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெரும்பாலான குக்கிராமங்களுக்கு தினமும் 2 வேளை பஸ் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராமங்களுக்கு ரோடு வசதி ஓரளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அதிக வளைவுகள், குறுகலான ரோடாக ஒருவழிப்பாதையாக இருக்கிறது. இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் கடும் சவாலாக இருக்கிறது. டூவீலர் விலகிச் செல்லவே போதிய இடம் இல்லாத நிலையில், இரு வாகனங்கள் விலகிச் செல்வது என்பது கடினமான ஒன்று. அது மட்டுமல்ல ரோட்டை ஒட்டி பக்கவாட்டு மண்ணை போடுவது கிடையாது. மழைக்கு அரிப்பு ஏற்பட்டு ரோடும் சேதமடைந்து வருகிறது. வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனை காரணம் காட்டி ஒரு சில கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலான கிராமப்புற ரோடுகளின் பக்கவாட்டில் மண்ணை அணைத்து வைக்க தேவையான நடவடிக்கை எடுத்து, பஸ் போக்குவரத்தை சீராக இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.