அரசு மருத்துவமனைகளில் சி.டி.,ஸ்கேன் எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கான கட்டணம் இனி ஆன்லைனில் செலுத்தலாம்
விருதுநக : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கான கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.தனியார் மருத்துவமனையில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவாவதால் அரசு மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிரிகரித்து வருகிறது. இங்கு சி.டி., ஸ்கேன் எடுக்க ஒரு பகுதிக்கு ரூ. 500 என பரிசோதனை கட்டணம் ரொக்கமாக மட்டுமே வசூலிக்கப்பட்டது.மேலும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகவும், உள், வெளி நோயாளிகளாக வருபவர்களுக்கும் சி.டி. ஸ்கேன் எடுக்க ஒரு பகுதிக்கு ரூ. 500, எம்.ஆர்.ஐ., ரூ. 2500 ரொக்கமாக வசூலிக்கப்பட்டது. இதில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எடுக்க முன்கூட்டியே பதிவு செய்து அப்ரூவல் கிடைத்த பின்பே இலவச பரிசோதனையாக எடுப்பது வழக்கம்.ஆனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் கையில் பணம் வைத்திருப்பதில்லை. மாறாக அலைபேசி மூலம் ஆன்லைன் வர்த்தகம், ஏ.டி.எம்., கார்டு வைத்துள்ளனர். இங்கு பரிசோதனை கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுவதால் மக்கள் ஏ.டி.எம்., மையங்களையும், இல்லாதவர்கள் அலைபேசியில் வங்கி இருப்பில் உள்ள பணத்தை எப்படியாவது ரொக்கமாக பெற உதவியை நாடும் நிலையே தொடர்ந்தது. இந்த பரிசோதனைக்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, அரசு தாலுகா மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனை கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதற்காக கட்டணங்களை செலுத்தும் மையங்களில் தனி க்யூ-ஆர் கோடு ஸ்கேனர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்த சுவைப்பிங் மிஷின்கள் கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன், ஏ.டி.எம்., கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி செயல்பாட்டிற்கு வந்ததுள்ளது.இதன் மூலம் பரிசோதனைக்கு வருபவர்கள் எளிதாக கட்டணங்களை செலுத்தி சிரமம் இன்றி பரிசோதனை எடுத்துச் செல்ல முடியும்.