ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம்
சிவகாசி : சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. சிவகாசி நகருக்கு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் அனைத்தும் திருத்தங்கல் ரோடு, விருதுநகர் பழைய ரோடு, சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் லாரிகளை நிறுத்தி விடுகின்றனர். ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பள்ளி கல்லுாரி பஸ்கள், நகர் பஸ்கள் இதனை கடப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றன. மேலும் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன், மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆகியோர் விருதுநகர் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு தலா ரூ. 2000 அபராதம் விதித்தனர். ரோட்டை ஆக்கிரமித்து இரும்பு கடை வைத்திருந்த இருவருக்கு ரூ. 7000 அபராதம் விதிக்கப்பட்டது.