நரிக்குடியில் ஒரே நாளில் மூன்று இடங்களில் தீ விபத்து
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் வைக்கோல் கட்டுகள், சீமை கருவேல மரங்கள், பனை மரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். நரிக்குடி சமத்துவபுரம் அருகே டிரான்ஸ்பார்மர் அருகில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களை கட்டுக்களாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டிரான்ஸ்பார்மரில் வயர்கள் உரசி தீப்பொறி ஏற்பட்டு வைக்கோல் கட்டுகளில் விழுந்ததில் தீ மளமளவென பிடித்து எரிந்து சேதமாகின. திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன், சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதேபோல் இருஞ்சிறை கட்டனூர் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கண்மாயில் சீமை கருவேல மரங்களில் தீ பிடித்து 2 கி.மீ., தூரம் தீ பரவி முற்றிலும் மரங்கள் சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இதைத்தொடர்ந்து கட்டனூர் பச்சேரி ரோட்டோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் தீ பிடித்து அருகில் இருந்த பனை மரங்களில் தீப்பற்றி எரிந்தது. ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைத்தனர்.