உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டில் பட்டாசு வெடி விபத்து எதிரொலி: வெம்பக்கோட்டையில் போலீசார் சோதனை

வீட்டில் பட்டாசு வெடி விபத்து எதிரொலி: வெம்பக்கோட்டையில் போலீசார் சோதனை

சாத்துார்: வெம்பக்கோட்டை தாயில்பட்டிகளில் நேற்று வீடு வீடாக சென்று போலீசார் தீவிர சோதனை செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தாயில்பட்டிவிஜய கரிசல்குளத்தில் நேற்று முன்தினம் வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டு ஜெகதீஷ் ,19 . முத்துலட்சுமி, 70.சண்முகத்தாய், 55.ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியாகினர் மேலும் மாரியம்மாள், 44. பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன்,அங்கு கூடியிருந்த மக்களிடம் , வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பதும், பட்டாசு ஆலையில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வீட்டில் வைத்திருப்பதும் குற்றம். விபத்து ஏற்பட்டு அப்பாவி உயிர்கள் பலியாவது வேதனை தருகிறது.இனிமேல் யாரும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.மீறி தவறு செய்பவர்கள் இரவு நிம்மதியாக துாங்க முடியாது. நானே நேரில் ஆய்வு செய்வேன்.தவறு செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனக் கூறினார். மேலும் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பதை தடுக்கவும் உரிய அனுமதியின்றி குடோன்கள் மற்றும் வீடுகளில் பட்டாசு ஸ்டாக் வைத்திருப்பவர்களையும் கண்டறிந்து பறிமுதல் செய்யவும் வழக்கு பதியவும் உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று சாத்துார் டி.எஸ்.பி நாகராஜன் தலைமையில் 10 தனிப்படை போலீசார் வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வி. மீனாட்சிபுரம் துரைச்சாமிபுரம் தாயில்பட்டி ,கோட்டையூர் கலைஞர் காலனி விஜய கரிசல் குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் குடோன்களுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர். இதில் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் உரிய அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசுகள் பிஜிலி,சரவெடி ,பென்சில்வெடி, ஸ்டாக் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர்கள் தலைமறைவான நிலையில் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.இந்த மாதம் முழுவதும் சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை