உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்று உரங்களை வாங்க நிர்ப்பந்தம்

மாற்று உரங்களை வாங்க நிர்ப்பந்தம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், அரசு கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருந்தும் மாற்று உரங்களை வாங்க வற்புறுத்துவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி, உளுந்து, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அரசு கூட்டுறவு சங்கங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது யூரியா உர தேவை அதிகமாக உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் கேட்கின்ற போது, குறைந்த அளவில்தான் மூடைகளை வழங்குகின்றனர். மேலும் மாற்று உரங்களை வாங்க நிர்ப்பந்தம் செய்கின்றனர். விவசாயிகள் கேட்கக்கூடிய உரங்களை மட்டும் கூட்டுறவு சங்கங்களில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து காவிரி, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ராம்பாண்டியன் : விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கூட்டுறவு சங்கங்கள் யூரியா உரங்களை வழங்குவது இல்லை. தேவையான உரங்களைக் கேட்டால் தேவையற்ற மற்ற உரங்களை வாங்க நிர்பந்திக்கின்றனர். தனியார், புதிய நிறுவனங்களின் உரங்களையும், தனியார் இடத்தில் விற்கப்படாத உரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, யூரியா உரம் தேவைப்படும் விவசாயிகளை இது போன்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது போன்று தவறான விற்பனையை கையாளும் கூட்டுறவு சங்கங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ