வனவிலங்குகளுக்கு உணவு விழிப்புணர்வு தேவை வனத்துறையினர் கோரிக்கை
ராஜபாளையம்: ராஜபாளையம் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு வருகை தரும் மக்கள் வன விலங்குகளுக்கு உணவு வழங்குவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என உயிரியல் ஆர்வலர்கள், வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.விடுமுறை தொடங்க உள்ளதால் வனப்பகுதி ஒட்டி உள்ள நீர் நிலைகள், கோயில்கள் சுற்றுலா தலங்களுக்கு பொழுது போக்குவதற்கு மக்கள் அதிகம் பேர் வருவர். இவர்கள் ஆர்வக்கோளாறில் தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்கள், உணவுகளை சுற்றி வரும் குரங்குகள், மயில் போன்றவற்றிற்கு வழங்குகின்றனர்.இதனால் இயல்பாக வனப்பகுதியில் இரையை தேடி சுற்றும் அதன் குணம் மாறி மக்களை எதிர்பார்த்து ரோடு ஓரங்களில் காத்திருக்கின்றன. இதனாலயே வன விலங்குகளுக்கு உணவு அளிப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் இச்செயல்கள் தொடர்வதால் வனவிலங்குகளின் இயல்பு பாதிப்பதாக கூறுகின்றனர்.இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், வனப்பகுதி ஒட்டிய மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் விலங்குகளுக்கு உணவு வழங்குவதும், தயார் செய்த மீத உணவுகளை வீசிச் செல்வதும் அதிகரிக்கிறது. இதனால் இப்பகுதிகளில் மான்கள், காட்டு யானைகள், மயில்கள், காட்டு பன்றிகள், காட்டு மாடுகள், குரங்குகள் இவற்றை தேடி படை எடுக்கின்றன.இவற்றால் விலங்குகளின் உணவை தேடும் இயல்பில் மாற்றம் ஏற்பட்டு வனத்திற்குள் செல்லாமல் காத்திருத்தலும், நோய் தொற்று, வேட்டைக்கு வாய்ப்பு போன்ற சிக்கல்கள் எழுகின்றன. வனவிலங்குகளின் இயல்பான சூழலை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.