சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருட்டு மூதாட்டி உட்பட நால்வர் கைது
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரிலையன்ஸ் ஸ்மாட் பாய்ண்ட் என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் பொருட்களை திருடிய ராக்கம்மாள் 60, ஜெயா 56, முத்துபாண்டியம்மாள் 55, வண்ணமதி 55, ஆகியோரை பஜார் போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரிலையன்ஸ் ஸ்மாட் பாய்ண்ட் என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம் செயல்படுகிறது. இங்கு மே 16ல் பொருட்களின் இருப்பை சரி பார்த்த போது குறைவாக இருப்பது தெரிந்தது.இதனால் நிறுவன ஊழியர்கள் சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் நான்கு பெண்கள் வாடிக்கையாளர் போல வந்து பொருட்களை திருடுவது தெரிந்தது. இந்த வீடியோ பதிவுகள் ஊழியர்களுக்குள் பகிரப்பட்டது.இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு அந்த நான்கு பெண்கள் மீண்டும் பொருட்களை வாங்குவது போல வந்தனர். ஆனால் சுதாரித்த ஊழியர்கள் நால்வரையும் மடக்கி பிடித்து பஜார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.விசாரணையில், மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் ராக்கம்மாள், ஜெயா, முத்துபாண்டியம்மாள், வண்ணமதி என்பதும் தெரிந்தது. இவர்கள் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டதால் நால்வர் மீதும் பஜார் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.