ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
காரியாபட்டி : ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி விபத்து நடப்பது, ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி, கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் இல்லாததால் கடக்க அச்சம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.காரியாபட்டி பேரூராட்சியில் முக்கு ரோட்டில் மதுரை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, கள்ளிக்குடி மார்க்கமாக செல்ல, பயணிகள் எப்போதும் பஸ்சிற்காக காத்திருப்பர். அத்துடன் தாலுகா அலுவலகம், மாரியம்மன் கோயில் என இருப்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் 4 வழித்தடங்களிலிருந்தும் டூ வீலர், கார், நடந்து சொல்பவர்கள் என குறுக்கும் நெடுக்குமாக ரோட்டை கடக்கின்றனர்.ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயலும் போது, அடிக்கடி விபத்து ஏற்படுவது, தொடர் கதையாக இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் ரோடு ஓரத்தில் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து கடைகள் வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை. கனரக வாகனங்கள் சென்றுவர பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.ரோட்டில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் ஏராளமான வாகனங்கள் இரு மார்க்கங்களிலும் வந்து செல்கின்றன. சிக்னல் இல்லாததால் அதி வேகமாக வரும் வாகனங்களால் ரோட்டை கடக்க மக்கள் படாதபாடு படுகின்றனர். கடக்க முயலும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்பாலம் வேண்டும்
சுரேஷ், தனியார் ஊழியர்: மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதுடன், அதிவேகமாக சென்று வருகிறது. ரோட்டை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. அடிக்கடி விபத்து நடப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுண்டானா வேண்டும்
ஆறுமுகம், தனியார் ஊழியர்: முக்கு ரோட்டில் நான்கு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள், ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக கடக்கின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விபத்து தொடர்ந்து நடக்கிறது. விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு
பாண்டியராஜன், வக்கீல்: ரோட்டோரத்தில் கடைகாரர்கள், நடமாடும் கடைக்காரர்கள் என ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.