உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் குடிநீர் மோட்டார் மின் ஒயர்களை திருடும் கும்பல் அதிகரிப்பு

சிவகாசியில் குடிநீர் மோட்டார் மின் ஒயர்களை திருடும் கும்பல் அதிகரிப்பு

சிவகாசி : சிவகாசி அருகே சித்துராஜபுரம், பேர் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மோட்டார் மின் ஒயர்களை திருடி செல்லும் கும்பல் அதிகரிப்பால் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். சிவகாசி கிராமங்களில் உள்ளூர் தண்ணீர் ஆதாரம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதற்காக அப்பகுதியில் உள்ள கண்மாய், ஊருணி போன்றவைகளில் போர்வெல் அமைக்கப்பட்டு அருகிலேயே மோட்டார் அறை கட்டப்பட்டு அங்கிருந்து மோட்டார் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. மோட்டார் இயக்குவதற்காக அப்பகுதியில் மின் ஒயர்கள் உள்ளது. பெரும்பாலும் கண்மாய்கள், ஊருணிகள் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் இருப்பதால் இரவில் மோட்டாரை கண்காணிக்க வழி இல்லை. இதனை பயன்படுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள் கண்மாயில் இருந்து மோட்டாருக்கு செல்கின்ற மின் ஒயர்களை திருடிச் சென்று விடுகின்றனர். ஒயர்கள் திருடப்படுவதால் அவ்வப்போது கிராம பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் சித்துராஜபுரம், பேர் நாயக்கன்பட்டியில் கண்மாயில் பதிக்கப்பட்டிருந்த ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்பட்டனர். இதே நிலைதான் சிவகாசி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடக்கிறது. எனவே மின் கேபிள் ஒயர்களை திருடுபவர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி