பாலத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் காரியாபட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற புதிய அரசு பஸ் பழுதாகி நின்றது. விருதுநகரில் இருந்து காரியாபட்டிக்கு பல அரசு, தனியார் பஸ்கள் தினசரி இயக்கப்படுகிறது. கல்குறிச்சி, மல்லாங்கிணர், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள், பெண்கள், வயதானவர்கள், வேலைக்கு சென்று வருபவர்கள் அரசு பஸ்களையே விரும்பி பயணித்து வருகின்றனர். இதனால் காரியாபட்டி வழித்தடத்திற்கு புதிய அரசு பஸ்கள் வழங்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விருதுநகரில் இருந்து காரியாபட்டிக்கு புறப்பட்ட புதிய அரசு பஸ் விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பாலத்தில் சென்ற போது பழுதாகி நின்றது. இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டு அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பாலத்தில் பஸ் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.