காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சுகுமார் தலைமையில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர்கள் கணேஷ், ஆரோக்ய ரூபன் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு, புதிதாகப் பிறந்த பராமரிப்பு சேவைகள் (CEMONC) 5 உள்ளது. இங்கு அரசு விதிகளின் படி 25 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 14 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 2 பேர் சி.சி.எஸ்., மருத்துவர்கள், மீதமுள்ள 12 பேருடன் பராமரிப்பு சேவைகள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதனால் ஒவ்வொரு மருத்துவரும் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை 24 மணி நேரம் பணி செய்கிறார்கள். பணிச்சுமையால் ராஜபாளையத்தில் 2 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்.மேலும் கல்கட்டா பெண் மருத்துவர் கொலை சம்பவம் எதிரொலியாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு தங்குமிடங்கள் வழங்கி, பாதுகாப்பு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., தலைமையில் மருத்துவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.