பழைய கல்வி தகுதி அடிப்படையில் அங்கன்வாடி பணியிடத்தை நிரப்ப வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
விருதுநகர்:அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதை திருத்தம் செய்து பழைய கல்வி தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறினர். இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: அங்கன்வாடி திட்டத்தில் 3592 அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு திட்டத்தில் 8997 சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் தேர்வு செய்வதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பும், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 5ம் வகுப்பும் படித்து இருக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த கல்வி தகுதியை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தமிழக அரசு மாற்றியுள்ளது.6ம் வகுப்பு, 8ம் வகுப்புகளில் இன்றும் இடைநிற்றல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது சரியல்ல. இப்பணிகளில் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், இயற்கை பேரிடர், கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கன்வாடி உதவியாளர், சமையல் உதவியாளர் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. இனி எதிர்காலத்தில் இது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி வழங்க இயலாத சூழல் ஏற்படும். எனவே அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.