அரசாணையின்படி கண் புரை அறுவை சிகிச்சைக்கு காப்பீடு அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
விருதுநகர்: 'தமிழகத்தில் அரசாணையின்படி கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: கண்புரை அறுவை சிகிச்சைக்கு அரசாணைபடி ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 2023 நவ., வரை கண்புரை அறுவை சிகிச்சைக்கு அரசாணைக்கு புறம்பாக ரூ.24 ஆயிரம் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்கி வந்தது. இதையடுத்து மதுரையில் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கூட்டத்தில் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. நவ.,க்கு பின் முறையாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2024ல் சில மாதங்களாக கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரத்திற்கு பதில் ரூ.21 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்தின் இச்செயல் அரசாணைக்கு புறம்பானது. கண்டனத்திற்குரியது.கூடுதல் தொகை கேட்டு மருத்துவமனையில் இருந்து அனுப்பிய கடிதத்திற்கு வழங்க இயலாது என்றும் பதில் தெரிவித்துள்ளது. எனவே அரசாணையின்படி கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.