உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 52வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்; அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வர எதிர்பார்ப்பு

52வது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டம்; அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வர எதிர்பார்ப்பு

விருதுநகர் : அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் தொடர்ந்து 52வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்சன் திட்டம் அமல்படுத்துதல், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்கல், 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியர்களின் நிலுவைகளை வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு, ஒப்பந்த உயர்வு, குறைந்தபட்ச பென்சன் உயர்வு, அகவிலைப்படி உயர்வுகள் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக. 18 முதல் அந்தந்த மாவட்ட அரசு டிப்போ தலைமையகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டம் நேற்றுடன் 52வது நாளை கடந்தும் இதுவரை துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை. மாநில அரசின் நடவடிக்கையால் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த எதிர்ப்பை எதிர்கட்சி தொழிற்சங்கங்கள் தங்களுக்கான ஓட்டுக்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட துவங்கியுள்ளனர். மேலும் அக்.14ல் துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் விவாதங்களை எழுப்பவும் தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு தரப்பில் பேச்சு வார்த்தையை நடத்தி சுமூகமான முடிவு எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ