உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழு ஆய்வு, வருமானம், வயது வரம்பின்றி உதவித்தொகையை வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

குழு ஆய்வு, வருமானம், வயது வரம்பின்றி உதவித்தொகையை வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

விருதுநகர்: ''தமிழக அரசு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை குழு ஆய்வு, வருமானம் போன்ற வரம்பின்றி வழங்க வேண்டும்,'' என, விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது : தமிழகத்தில் அரசு ஆவணங்களின்படி 14 லட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் மன வளர்ச்சி குன்றியோர் 75 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றவர்கள், தசை சிதைவு பாதித்தவர், தொழுநோய் பாதித்தவர்கள், தண்டுவடம் பாதித்தோர் ஆகிய 5 பிரிவினருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட மற்ற எல்லா மாற்றுத்திறனாளிகளுக்கும் வருவாய்த்துறை மூலம் மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகை வயது வித்தியாசமின்றி, வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையில் வருமான உச்சவரம்பு பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்ற விதியுடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உதவி தொகை வேண்டினால் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் இருக்கக்கூடிய வயது தளர்வு குழுவுக்கு விண்ணப்பித்து அந்த குழுவின் முடிவின் படி வழங்கப்படுகிறது. இது 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கு எதிரானது. அவர்களுக்கு குறைந்தபட்ச மருந்து மாத்திரைகள் வாங்க ஏழை, நடுத்தர குடும்பங்கள் சிரமப்படுகின்றன. கூடுதலான செலவுகளை அக்குடும்பங்கள் சந்திக்கின்றன. இக்கோரிக்கை தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் போராடினோம். தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஆட்சியே முடிய போகும் சூழலும் வந்து விட்டது. ஆனால் தற்போது வரை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை