உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜி.எஸ்.டி., 12 சதவீத வரி முற்றிலும் நீக்கம் நோட்டு புத்தகங்கள் விலை குறைய வாய்ப்பு

ஜி.எஸ்.டி., 12 சதவீத வரி முற்றிலும் நீக்கம் நோட்டு புத்தகங்கள் விலை குறைய வாய்ப்பு

சிவகாசி:மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி., முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். சிவகாசியில் 150 க்கும் அதிகமான அச்சகங்களில் நோட்டு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 70 க்கும் மேற்பட்ட அச்சகங்கள் 20 முதல் 320 பக்கங்கள் வரை உள்ள நோட்டுகளை மட்டும் தயாரிக்கின்றன. இவை கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு பேப்பர் விலை குறைவால் நோட்டுகளின் விலை 10 சதவீதம் வரை குறைந்தது. இந்நிலையில் பென்சில், மேப், சார்ட், நோட்டு புத்தகங்கள், வரைபட புத்தகம், ஆய்வக புத்தகம், பயிற்சி புத்தகம் மற்றும் இவை உற்பத்தி செய்ய பயன்படும் காகிதம் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி., முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு மூலம் நோட்புக் விலை குறையும் என நோட்புக் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிவகாசி சீமா நோட்புக் உரிமையாளர் மாரிராஜன் கூறியது: நோட்புக்குக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி., நீக்கப்பட்டது நேரடி பலனை அளிக்கும். ஆனால் பிற காகிதங்களுக்கான ஜி.எஸ்.டி., 12 ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும், என்றார்.

காலண்டர் விலை 6 சதவீதம் உயரும்

2017 ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் பட்டியலில் இருந்த காலண்டருக்கு ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட போது, 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. 2022ல் அது 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது காலண்டர் உற்பத்திக்கான முக்கிய மூலப் பொருளான காகிதம் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீத அடுக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் காலண்டர் விலை மேலும் 6 சதவீதம் உயரும் என தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை