காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் நியமனம்
காரியாபட்டி: காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆய்வுக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சரிடம் நியமனம் செய்ய வலியுறுத்தினர். உடனடியாக நியமிக்கப்படும் என தெரிவித்து சென்றவர், இதுவரை நியமிக்கப்படாததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் 800க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு 5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். 4 பேர் பணியில் உள்ளனர். சில டாக்டர்கள் விடுப்பு எடுக்கும் சமயங்களில் போதிய டாக்டர்கள் இருப்பதில்லை. வெளி நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. விபத்து நேரிட்டால் டாக்டர்கள் இல்லாமல் பரிதவிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் காரியாபட்டிக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு செய்து, மகப்பேறு நடைபெறுவது குறித்து கேட்டறிந்தார். அப்போது டெப்டேஷன் அடிப்படையில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு மகப்பேறு நடப்பதாக தெரிவித்த டாக்டர்கள், மகப்பேறுக்கு தனியாக மருத்துவர் நியமிக்கப்பட்டால் கூடுதலாகவும், அதிக கவனம் செலுத்தி மகப்பேறு நடைபெறுவதற்கு வசதியாக இருக்கும் என தெரிவித்தனர். இதனை ஏற்று உடனடியாக நியமிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துச் சென்றார். பல நாட்களாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் அறிவித்ததை கிடப்பில் போட்டுள்ளதால், விரைந்து நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.